You are here
Home > Home > Reviews > விமர்சனம் – தோழர் வெங்கடேசன்

விமர்சனம் – தோழர் வெங்கடேசன்

படம்: தோழர் வெங்கடேசன்
இயக்கம்: மகா சிவன்
ஒளிப்பதிவு: வேதா செல்வம்
இசை:சகிஷ்ன
நடிகர் நடிகையர் : ஹரிசங்கர் மோனிகா, தீரன், அரசன்

சமீபத்தில் வந்த தமிழ் படங்களில் தோழர் வெங்கடேசன் ஒருமுக்கிய படமாக திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஒரு முக்கிய சமுதாய பிரச்சினையை இயக்குனர் மகாசிவன் மிகவும் அழகாக, தெளிவாக , சுவாரசியமாக இப்படத்தில் கூறியிருக்கிறார்.

சரி, கதைக்கு வருவோம். வெங்கடேசன் என்னும் ஒருகடின உழைப்பாளி தான் செய்யும் தொழிலை தெய்வமாக வணங்கி அதில் பெருமையும் கொள்கிறார். அவர் சோடா தயாரித்து விற்று அதன்மூலம் வாழ்ந்து வருகிறார்.

அதே ஊரில் கமலி எனும் பெண் தன் தாயாருடன் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து பிழைத்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் கமலியின் தாயார் இறக்க, அவள் நிர்க்கதியாக நிற்கிறார்.

ஒரு இளம்பெண் பாதுகாப்புக்கு பெற்றோர் இன்றி தனியே இருந்தால் என்னவெல்லாம் தொந்தரவு வருமோ அவை எல்லாம் கமலிக்கும் வருகின்றன.
வேறுவழியின்றி தற்கொலைக்கு முயல்கிறார் கமலி.

ஆனால், நல்லவேளையாக வெங்கடேசன் அந்நேரத்தில் அங்கு வர , காப்பாற்றப்படுகிறார்.

நிற்கதியாய் நிற்கும் கமலிக்கு ஆதரவு தருகிறார் வெங்கடேசன். தன்னுடன் தங்கும்படி வெங்கடேசன் அழைக்க, ஒத்துக் கொள்கிறார் கமலி.
அவர் கம்பெனியில் வேலையும் செய்ய ஆரம்பிக்கிறார் கமலி. இருவருக்கும் காதல் மலர்கிறது.

தன்னை நம்பி வந்த கமலிக்கு நல்ல வாழ்வை அளிக்க வேண்டும், மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து கடுமையாக உழைக்கிறார் வெங்கடேசன்.

ஆனால், அவர்கள் கனவு கலையும் படி ஒரு விபத்து நேரிடுகிறது. விபத்தில் தன் இரு கைகளையும் இழக்கிறார் வெங்கடேசன்.
தானே தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையில் இல்லாத வெங்கடேசன், தன்னை நம்பி வந்த கமலியை நோக்கி,” நீ உன் உறவினர்களுடன் போய் தங்கிக்கொள்” என்று கூற கமலி மறுக்கிறார்.

அவர் கைகளை இழந்து நிற்கதியாய் நிற்கும் வெங்கடேசனை விட்டு பிரிய மறுத்து அங்கேயே தங்கிக் கொள்கிறார்.

கைகளை இழந்த வெங்கடேசன் விபத்தை உண்டாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் மீதும் அரசு போக்குவரத்து கழகம் மீதும் வழக்கு தொடர்கிறார்.

நஷ்ட ஈடு கேட்டு முறையீடு செய்கிறார். பெரும் பாட்டிற்கு பின் அவருக்கு 20 லட்சம் நஷ்ட ஈடாக கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட நஷ்டஈட்டை கொடுக்காமல் அவரை தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகளும் , காவல் துறையும், அரசாங்கமும், அலைகழிக்கும் விதத்தை அழகாக பதிவு செய்கிறது தோழர் வெங்கடேசன்.

இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக கருத பல காரணங்கள் உண்டு.

To read this review in English, Click Here

முதல் காரணம் இப்படத்தின் இயக்குனர் மகா சிவன் அவர்கள். ஒரு மிகச் சரியான கதையை மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டின் போது மகா சிவன் இப் படத்தை இயக்குவதற்கு முன் அவரை பல தயாரிப்பாளர்கள் அணுகியதாகவும் ஆனால் அவர்களிடத்தில் இவர் ‘ உங்களை நம்பி மக்கள் இருக்கிறார்களா? இதற்காக நீங்கள் கடன் வாங்க போகிறீர்களா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு அதன் பின் அவர்கள் தயாராக இருந்தாலும் இவர் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தாராம். ஏனெனில், ஒரு தயாரிப்பாளர் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் ஒரு படத்தில் செலவழித்து விட்டு அதன்பின் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்படம் ஓடவில்லை என்றால், அந்த தயாரிப்பாளர் நிற்கதியாய் நிற்பதை அவர் விரும்பவில்லை. எனவே, தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுப்பதற்கு தயாராக இருந்தாலும், இயக்குனர் தன் தயாரிப்பாளரின் நலன் கருதி, அவ்வாய்ப்பை நழுவ விட்டார்.

தயாரிப்பாளர் கிடைத்தால் போதும் என்று எண்ணும் பல இயக்குனர்கள் இருக்கும் இந்த சினிமா துறையில், இந்த இயக்குனர், தான் எடுக்கப்போகும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்று இப்படக்குழுவினர் இவரைப் பற்றி உயர்வாக கூறினர். இதிலிருந்தே இயக்குனர் எப்படிப்பட்ட ஒழுக்கம் மிக்க நபர் என்பது நமக்கு புரிகிறது. அவர் படமும் நேர்த்தியாக உள்ளது.

படத்தின் கதாநாயகன் ஹரி சங்கர் மற்றும் கதாநாயகி மோனிகா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஹரி சங்கர் வெங்கடேசன் ஆகவே மாறிவிடுகிறார். அதேபோல் மோனிகா கமலியாகவே நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
இப்படத்தின் கிளைமாக்ஸ் நம்மை பதைபதைக்க வைக்கிறது.

இக்கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கதை இக்கதையில் வரும் கதாபாத்திரங்களைப் போலவே விபத்தினால் பாதிப்படைந்த பலர் அரசாங்கத்திடம் இன்னும் நஷ்ட ஈடு பெறுவதற்கு எப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் படத்தின் இறுதியில் காண்பிக்கிறார்கள். அதற்கு ஒரு சபாஷ்.

ஆக மொத்தத்தில் தோழர் வெங்கடேசன் ஒரு சிறந்த படம் என்பதில் ஐயமில்லை.

Please follow and like us:

Leave a Reply

Top

Enjoy this site? Please spread the word :)